காட்டுமன்னார்கோவில், டிச. 09:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.அரசூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடக்கரை சாலை, சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தினசரி போக்குவரத்து பாதையாக விளங்கும் இந்த சாலையில், கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு, சாலையின் பாதி பகுதி கொள்ளிடம் ஆற்றுப்பக்கம் நோக்கி உள்வாங்கி சரிந்து வருகிறது.
கீழணை பகுதியிலிருந்து தொடங்கும் இந்த சாலை சுமார் 60 கிலோமீட்டர் தூரம் சென்று வல்லம்படுகை பகுதியில் இணைகிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் முக்கிய வழிச்சாலையாக இதை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு சாலையின் மேற்பரப்பு முறிந்து சரிந்த நிலையில் உள்ளது. ஆற்றுக்கும் சாலைக்கும் இடையே சுமார் 20 அடி ஆழமான பள்ளம் காணப்படுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசர கால வாகனங்களும் கிராமப்பகுதிக்கு நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பெரும் முதலீட்டில்—சுமார் ₹62 கோடி ரூபாய்—அமைக்கப்பட்ட சாலை என்பதால், இதன் தரத்திற்கான கேள்விகள் கிராம மக்களிடையே எழுந்துள்ளன. “சாலை அமைக்கும் முன் கான்கிரேட் தடுப்பு சுவர் அவசியம் என்ற எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் இஷ்டப்படி சாலை அமைத்ததன் விளைவுதான் இன்று இந்த நிலை” என மக்கள் வேதனையோடு குற்றம் சாட்டுகின்றனர்.
மழை பெய்து வரும் நிலையில் சாலை மேலும் உடைந்து சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. “சாலை முழுமையாக துண்டிக்கப்படும் முன், உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து பின்னர் சாலை சரிசெய்ய வேண்டும்” என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் கிராமங்கள், வயல்கள் சேதமடைந்த வரலாறும் இருப்பதால், இந்தச் சாலைக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்ளிடக்கரை சாலை, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக இணைந்திருக்கிறது. மாற்று வழி இல்லாததால், உடனடி நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
— தமிழக குரல் கடலூர் மாவட்ட செய்தியாளர் : P. ஜெகதீசன்
© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662

No comments:
Post a Comment